கோவை : கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் நீர் சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குட்டை, தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த குட்டைக்கு, உக்கடம் புல்லுக்காட்டில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர், ராட்சத குழாய்கள் மூலமாக கொண்டுவரப்படுகிறது. இந்த குட்டை, 600 லட்சம் லிட்டர் (60 எம்எல்டி) கொள்ளளவு கொண்டது ஆகும்.
இது, வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டால் அதை விரைந்து அணைக்கவும், பயோ-மைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கவும் உதவுகிறது. புனரமைக்கப்பட்ட இந்த குட்டையில் நீர்சேகரித்தல் மற்றும் இதன் செயல்பாட்டினை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று துவக்கிவைத்து, பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: இக்குட்டையில் முட்புதர்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. கரைகள் முற்றிலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் கசிவு ஏற்பட்டு பூமிக்கு அடியில் செல்லாதவாறு தார்பாலின் ஷீட் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குட்டையில் சுமார் 600 லட்சம் லிட்டர் (60 எம்எல்டி) தண்ணீர் சேமிக்க முடியும். உக்கடம் புல்லுக்காடு மறுசுழற்சி மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீரானது பூமிக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு, அதன்மூலம் இங்கு கொண்டுவரப்படுகிறது.
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வளர்க்கப்பட்டு வரும் மரங்களுக்கு இந்த தண்ணீர் ஊற்றப்படுகிறது. குப்பை மாற்று நிலையத்தில் குப்பைகளை உரமாக்கும் பணிகளுக்கும் மற்றும் தீத்தடுப்பு பணிகளுக்கும் இந்த நீரானது பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் குமரேசன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி கமிஷனர் குமரன், செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், கவுன்சிலர் அஸ்லாம்பாஷா, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஜீவராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post தீ விபத்து தடுக்கும் வகையில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் புனரமைக்கப்பட்ட நீர்தேக்க குட்டை appeared first on Dinakaran.