சென்னை,: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கை:
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி- லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பிரிவு உபசார விழாவினை தமிழ்நாடு ஆளுநர் அதுவும் ஆளுநர் மாளிகையிலேயே நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பல்கலைக்கழகங்கள் தோறும் மதவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ஆளுநர், ஊழல் வழக்கில் உள்ளவரையும் அதிலும் குறிப்பாக பினாமி கம்பெனியை உருவாக்கி ஊழல் புகாரில் சிக்கியுள்ளவரை எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகையில் வரவேற்றார்? முறைகேட்டு புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர்.
துணைவேந்தராக இருக்கும் போதே சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரைத் திட்டியதால் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழான வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவருக்கு பதவிக்காலம் முடிந்த பின்னரும் பணி நீட்டிப்பு வழங்கியதோடு இப்படிப்பட்ட துணைவேந்தர் ஒருவருக்கு ராஜ்பவனில் பிரிவு உபசார விழாவினையும் நடத்தியதன் மூலம் “வேந்தர்” என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை ஆளுநரே இழந்து விட்டார். ஊழல்வாதிக்கு ஆளுநர் நடத்திய விழா பெருத்த அவமானத்திற்குரியது மட்டுமின்றி பல்கலைக்கழக வரலாற்றில் ஆளுநர் தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழா; தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டார் ஆளுநர் ரவி: அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் appeared first on Dinakaran.