துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) புதிதாக ஒரு வரைவு மசோதாவை வெளியிட்டு, எரியும் நெருப்பில் எண்ணை வார்த்துள்ளது.
யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், யுஜிசி சார்பில் ஒருவர், ஆளுநர் சார்பில் ஒருவர் மற்றும் பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் மட்டுமே இடம்பெறுவர். இதில் மாநில அரசின் பிரதிநிதிக்கு இடமில்லை. இதன்மூலம் மாநில அரசின் உரிமை பறிபோகிறது என்பது தமிழக அரசின் வாதம். பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலமும் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.