அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மற்றும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 10 பேர் கொண்ட குழுவினரான வீரர்கள் களமிறக்கப்பட்டனர். முன்னதாக வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் இளைஞர்களிடம் சிக்காமல் தங்கள் திறனை வெளிப்படுத்தி விளையாட்டு காட்டிய காளைகளுக்கும் கேடயம் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா மணிமாறன், நகரச் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், காயத்ரி, இதயச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, அலங்காநல்லூர் பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன், கோகுல் கோவிந்தராஜ், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் வாவிட மருதூர் கார்த்திகேயன், பிரதாப், ஒன்றிய அணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி உற்சாக வடமாடு மஞ்சுவிரட்டு: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கினார் appeared first on Dinakaran.