திருச்சி: திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகி முன்மாதிரியாக விளங்கினார். அதுபோல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டுமென மீண்டும் வலியுறுத்துவோம். காஷ்மீரில் நடந்த தாக்குதல் இருநாட்டுக்கும் போராக மாறிவிடக்கூடாது. காஷ்மீர் விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு பயன்படவில்லை. இந்த தாக்குதல் மதத்தை பார்த்து நடந்ததுபோல் தெரியவில்லை. ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து மே 31ம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்தவுள்ளோம். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து தமிழ்நாடு அரசுக்கும், துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை ஆளுநர் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார். துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்துள்ளனர். ஆளுநரின் இதுபோன்ற செயல்பாடு அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
The post துணை வேந்தர்களுக்கு ஆளுநர் நெருக்கடி: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.