ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிட தமிழர் கட்சியினர் நிறுவன தலைவர் வெண்மணி தலைமையில் ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று ஊட்டி ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊட்டி ஏடிசி பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது. சிபிஐ மாவட்ட செயலாளர் போஜராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஊட்டி மத்திய பஸ் நிலைய பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
விசிக, திராவிடர் கழகம், கிறிஸ்தவ சமூகநீதி பேரவை, மக்கள் அதிகாரம், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம், மக்கள் கலை இலக்கிய கழகம், ரத்ததானம் நண்பர்கள் குழு, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகம், தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கட்சி, ஜனநாயக மக்கள் கழகம், தமிழ் சிறுத்தைகள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், சமூக செயல்பாட்டாளர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோஷங்கள் எழுப்பியபடி ராஜ்பவன் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தபெதிக, விசிகவினர் உள்ளிட்ட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆளுநரை கண்டித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து ெகாண்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து 5 பெண்கள் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊட்டி ராஜ்பவன் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். ஆளுநரை கண்டித்து நடந்த போராட்டத்தில் மொத்தம் 330 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post துணை வேந்தர்கள் மாநாடுக்கு எதிர்ப்பு; ஆளுநரை கண்டித்து முற்றுகை போராட்டம்: காவல்துறையுடன் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.