* விஜிலென்ஸ் தனிப்படை சுற்றிவளைத்தது, கடத்தலுக்கு துணைபோன 4 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம், ஐபோன்களை கடத்தி வந்த 13 பேரை, சென்னை விமான நிலையத்தில், சோதனையின்றி சுங்கத்துறை அதிகாரிகளே வெளியில் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தல் பயணிகள் பெருமளவு தங்கம் மற்றும் விலை உயர்ந்த ஐபோன்கள் கடத்திக் கொண்டு வருவதாகவும், அவர்கள் சுங்கச் சோதனை இல்லாமல், சில அதிகாரிகள் உதவியுடன், வெளியில் எடுத்துச் செல்வதாகவும், சுங்கத்துறை விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விஜிலென்ஸ் தனிப்படை அதிகாரிகள், சாதாரண உடையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலைய வெளிப்பகுதியில் நின்று கொண்டு கண்காணித்தனர். அப்போது துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து 2 விமானங்களில் வந்த பயணிகள் வெளியில் வந்து கொண்டு இருந்தனர். சுங்கத்துறை விஜிலென்ஸ் தனிப்படையினர், அதில் வந்த 13 பயணிகளை சந்தேகத்தில் நிறுத்தி விசாரித்தனர். அதோடு அவர்களுடைய உடைமைகளையும் சோதனை செய்தனர்.
அப்போது அந்தப் பயணிகள் நாங்கள் ஏற்கனவே விமான நிலையத்திற்குள், சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டுதான் வெளியில் வருகிறோம். நீங்கள் வெளியில் நின்று கொண்டு எப்படி எங்களை மீண்டும் சோதிப்பீர்கள்? என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஜிலன்ஸ் அதிகாரிகள், விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்து, போலீசார் உதவியுடன், அவர்களிடம் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த 13 பயணிகளிடம் இருந்து சுமார் 1.5 கோடி மதிப்புடைய, 2 கிலோவுக்கு மேற்பட்ட தங்க பசைகள் மற்றும் ஐபோன்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு, ஐபோன்களுக்கு சுங்க தீர்வையும் விதித்தனர். மேலும் அந்த 13 பயணிகளிடம், விஜிலன்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள சுங்க அதிகாரிகள் சிலர் உதவியுடன்தான், இவர்கள் சுங்கச் சோதனை இல்லாமல், இந்த கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 13 பயணிகளிடம், விஜிலன்ஸ் அதிகாரிகள் வாக்குமூலங்கள் பெற்று, உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இந்த நிலையில் உடனடியாக சனிக்கிழமை மதியம், இதில் சம்பந்தப்பட்ட சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை சூப்பரண்டுகளாக பணியில் இருந்த பரமானந்த் ஜா, சரவணன் ஆதித்யன், சுனில் தேவ் சிங்க், டல்ஜெட் சிங்க் ஆகிய 4 அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இவர்கள் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை கடற்கரை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு, காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு இந்த 4 அதிகாரிகள் மீதும், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூரில் இருந்து, தங்கம் ஐபோன்கள் கடத்தி வந்த 13 கடத்தல் குருவிகளிடம், சோதனைகள் நடத்தாமல் வெளியில் அனுப்பப்பட்டு, சுங்கத்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுத்ததோடு, கடத்தல் குருவிகளுக்கு துணை போன சுங்கத்துறையின் 4 அதிகாரிகள் மீது, அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* கடத்தல் குருவிகளுக்கு துணை போன சுங்கத்துறையின் 4 அதிகாரிகள் மீது, அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 13 பேரை சோதனையின்றி வெளியே அனுப்பிய சுங்கத்துறை அதிகாரிகள்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.