*கருப்புக்கொடியுடன் கடற்கரையில் ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் : தூண்டில் வளைவு பால விவகாரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமலிநகர் மீனவர்களுக்கு ஆதரவாக பெரியதாழை முதல் புன்னக்காயல் வரை 12 கிராம மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படகுகளில் கருப்புக்கொடியும் ஏற்றியும், கடற்கரையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 220க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். அமலிநகரில் கடல் அரிப்பை தடுத்திடும் வகையில் தூண்டில் வளைவு பாலப்பணிகள் முழு மூச்சில் நடந்து வருகிறது. இதில் அமலிநகர் கடலின் தெற்குப் பகுதியில் கருங்கற்களால் தூண்டில் வளைவும், அதைத் தொடர்ந்து வடக்கு நோக்கி 5 இடங்களில் கற்களால் ஆன தூண்டில் பாலமும் அமைக்கப்பட்டு வருகிறது.
தெற்கு நோக்கி மட்டும் வளைவு அமைக்கப்பட்டு உள்ளதால் கடல் அலை முழுவதும் வடக்கு நோக்கி வருவதால் கடற்கரையோரம் பெரும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் படகுகள் நிறுத்த முடியாமல் மீனவர்கள் அவதியடைகின்றனர்.
மேலும் மீன்வலை பின்னும் கூடம் அருகில் சுமார் 25 மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே தற்போது வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள தூண்டில் பாலத்தை வளைவாக சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இக்கோரிக்கைக்காக நவ.14ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமலிநகர் மீனவர்களுக்கு ஆதரவாக நேற்று பெரியதாழை, மணப்பாடு, பதுவாநகர் (கல்லாமொழி), ஆலந்தலை, திருச்செந்தூர் ஜீவா நகர், வீரபாண்டியன்பட்டினம், சிங்கித்துறை, கொம்புத்துறை, பழையகாயல் மற்றும் புன்னக்காயல் உள்பட 12 மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலோர மீனவ கிராமங்களில் சுமார் 2200க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன.
மேலும் மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள், ஊர்நலக்கமிட்டி நிர்வாகிகள் நேற்று காலை அமலிநகர் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து அமலிநகர் மீனவர்கள் 8 படகுகளில் கருப்புக்கொடியுடன் கடலில் இறங்கியும், மற்ற மீனவர்கள், பெண்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அமலிநகர் கடற்கரையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள படகுகளில் கருப்புக்கொடியும் கட்டப்பட்டிருந்தன.
இதனிடையே அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று அமலிநகர் வந்து ஊர்நலக்கமிட்டியினரை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது சண்முகநாதனிடம் கமிட்டி தலைவர் செல்வராஜ், செயலாளர் அந்தோணி, பொருளாளர் கலைச்செலவன், நிர்வாகி தஸ்நேவிஜஸ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து கடற்கரையில் தூண்டில் பாலப் பணி நடைபெறும் இடத்தை பார்வையிட்ட சண்முகநாதனிடம் தூண்டில் பாலத்தை வளைவாக மறுசீரமைக்க வேண்டிய இடத்தினை ஊர்நலக் கமிட்டியினர் காண்பித்தனர்.
அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பூந்தோட்டம் மனோகரன், விஜயகுமார், காசிராஜன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன், நகர மகளிரணி பொறுப்பாளர் அமலி சுகிர்தா, முன்னாள் நகர செயலாளர் சந்திரன், துணை செயலாளர் செல்வசண்முகசுந்தர், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வடிவேல், பாசறை ஒன்றிய செயலாளர் வினோத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
‘‘ஆலந்தலையில் உள்ளதுபோல் அமையுங்கள்’’
மீனவ பெண்மணி செல்வம் கூறுகையில், எங்களின் கோரிக்கையை ஏற்று அரசு தூண்டில் பாலம் அமைக்கிறது. ஆனால் சரிவர செய்யவில்லை. உடனடியாக தெற்கு பகுதியில் வளைத்தது போல வடக்குப்பகுதியிலும் தூண்டில் பாலத்தை வளைத்து மீனவர்கள் உயிருக்கு சேதாரம் இல்லாமல் நாள்தோறும் கடலுக்குச் சென்று நல்லவிதமாக திரும்பி வர வழி செய்ய வேண்டும்.
தமிழக அரசு எங்களுக்கு தூண்டில் வளைவு பாலத்தை மறு சீரமைத்து தரும் என 25 நாட்களுக்கு மேலாக நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆலந்தலையில் உள்ளதுபோல அமலிநகரிலும் நல்ல முறையில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தர வேண்டும், என்றார்.
அதிமுக துணை நிற்கும்
அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட அமலிநகரில் வசிக்கும் மீனவ மக்கள் கேட்டது, தூண்டில் வளைவு. ஆனால் அரசு தூண்டில் பாலத்தை அமைத்திருக்கிறது. இதனால் அமலிநகரில் கடல் அலை அதிகமாகி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. படகுகளும் சேதமாகிறது. எனவே தூண்டில் பாலத்தை வளைவாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் 25 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
மீனவர்களுக்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளோம். மீனவர்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளருக்கு தெரிவிப்போம். போர்க்கால அடிப்படையில் மீனவர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைய வேண்டி எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கையை கொடுத்து அறிக்கையாக வெளியிட்டு உடனடியாக நிறைவேற்றுவதற்கான வழிவகையை அதிமுக இந்த மக்களுக்கு செய்யும். தேவைப்பட்டால் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம், என்றார்.
The post தூண்டில் பால விவகாரத்தில் தொடர் போராட்டம் அமலிநகர் மீனவர்களுக்கு ஆதரவாக 12 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.