தூத்துக்குடி/ நாகர்கோவில்: தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டியது. உப்பளங்களில் நடப்பாண்டுக்கான உப்பு உற்பத்தி முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. நேற்று அதிகாலையில் கனமழையாக மாறியது. மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8 மணி வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டார். நேற்று காலை 10 மணிக்கு பிறகு லேசான வெயில் அடிக்கத் தொடங்கியது.