தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்று ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள குமாரகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிலுவைபுரம், சிறுபாடு மற்றும் சவேரியார்புரம் கிராமங்களின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
குமாரகிரி ஊராட்சியில் உள்ள கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிலுவைபுரம், சிறுபாடு மற்றும் சவேரியார்புரம் கிராமங்களை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்காமல் தனி ஊராட்சியாக அல்லது குமாரகிரி ஊராட்சியாக தொடர ஆவண செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அய்யனடைப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் அதிஷ்டகணபதி, அதிமுக பிரமுகர் ராஜேந்திரன் மற்றும் கோரம்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வபிரபா ஆகியோர் தலைமையில் அந்த இரு ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில் மனுவில், எங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிக்கப்படும். மேலும், வரிகள் உயர்த்தப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, எங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்கக்கூடாது. தொடர்ந்து கிராம ஊராட்சிகளாகவே நீடிக்க வகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டாம்புளியில் ஆர்ப்பாட்டம்
ஸ்பிக்நகர்: குமாரகிரி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிறுப்பாடு, சவேரியார்புரம், சிலுவைபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டாம்புளி மெயின் ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த போராட்டத்தையொட்டி கூட்டாம்புளியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இப்போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் பட்டு முருகேசன் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைவர் டெல்லி மணி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மன் விபிஆர் சுரேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் பொன் செல்வராஜ்,சுகந்தி பொன் செல்வராஜ், சமூக ஆர்வலர்கள் ரமேஷ் பாபுஜி, பால்ராஜ் மற்றும் கூட்டாம்புளி, திருமலையாபுரம், சிறுப்பாடு, சவேரியார்புரம், சிலுவைபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு மூன்று ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.