*மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் வழங்கினார்
தென்காசி : தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த சிறுபான்மையினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பயனாளிகள் 82 பேருக்கு ரூ.71.46 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆணையத் தலைவர் அருண் வழங்கினார்.தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையினர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவரான பங்குத்தந்தை அருண் தலைமை வகித்தார்.
கலெக்டர் கமல் கிஷோர், ஆணையத்தின் துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், அரசு கூடுதல் செயலாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் ஹேமில்டன் வில்சன், சொர்ணராஜ், நாகூர், நஸிமுதீன், பிரவீன்குமார் டாட்டியா, ராஜேந்திரபிரசாத் முகமது ரபீ, வசந்த் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருண் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், சிறுபான்மையினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி சிறுபான்மையினர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும்.
மேலும் இப்பணியை விரைவுப்படுத்த தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல், சேலம், கரூர் கோவை, சிவகங்கை ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு. அக்கூட்டத்தின் வாயிலாகவே தகுதியுடைய கோரிக்கைகளுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் சிறுபான்மையின அமைப்பை சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த ஆணையத்தில் சிறுபான்மையின மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் வழங்கிய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக விசாரணை செய்து அறிக்கைகளை இந்த ஆணையம் பெற்று, தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தகுதியுடைய கோரிக்கைகள் அனைத்தும் அன்றைய தினமே தீர்வு காணப்பட்டு வருகிறது. நீண்ட நாட்கள் நிலுவையிலுள்ள கோரிக்கைகளை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மூலம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை, 7 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தொழில் உதவித் தொகை, 10 பேருக்கு தலா ரூ.8,300 வீதம் ரூ.83 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், 50 பயனாளிகளுக்கு 69 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் டாம்கோ கடன்கள், 9 பேருக்கு உபதேசியார் நலவாரியா உறுப்பினர் அடையாள அட்டைகள் என மொத்தம் 82 பேருக்கு ரூ.71.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் வழங்கினார்.
கூட்டத்தில் எஸ்.பி. சீனிவாசன், டிஆர்ஓ ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக் அப்துல்லா, தனித்துணை கலெக்டர் ஷேக் அயூப், தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி, தென்காசி புனிதமிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன், மொன்னா சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உடனுக்குடன் நடவடிக்கை..
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருண் மேலும் பேசுகையில் ‘‘கிறிஸ்தவர்களின் பயன்பாட்டிற்காக கல்லறை தோட்டம் அமைத்தல் மற்றும் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை ஏற்படுத்தி அதில் பேவர் பிளாக் அமைத்து தருதல் போன்ற கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
The post தென்காசி கலெக்டர் அலுவலக கலந்துரையாடல் கூட்டத்தில் பயனாளிகள் 82 பேருக்கு ரூ.71.46 லட்சம் நல உதவி appeared first on Dinakaran.