தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது; தென்காசி மாவட்டம், காசிவிசுவநாதசுவாமி கோவில் குடமுழுக்கு விழா 2025 ஏப்ரல் 7ம் தேதியும் (திங்கள்கிழமை), பங்குனி உத்திர திருவிழா 2025 ஏப்ரல் 11ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலும் இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கூறிய உள்ளூர் விடுமுறையை சரி செய்யும் வகையில் 2025 ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.