சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத, முன்னெப்போதும் இல்லாத ‘அரசியல் சம்பவம்’ ஒன்று தென்கொரியாவில் அரங்கேறியது. அந்நாட்டு அதிபர் யூன் சாங் யோல், தங்கள் நாட்டில் இருந்து வடகொரிய ஆதரவாளர்களை வெளியேற்றுவதற்காகவும், தென்கொரிய அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காகவும் ‘அவசரநிலை’யை பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
தென்கொரிய அதிபரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள், பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடாளுமன்ற நுழைவாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து, அதிபர் யூனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கொந்தளிப்பான சூழலைத் தொடர்ந்து, ‘அதிபரின் இந்த அவசரநிலை அறிவிப்பு செல்லாது’ என்று தென்கொரிய நாடாளுமன்ற சபாநாயகர் வூன் வொன் சிக் அறிவித்தார். ஆக, அவசரநிலை அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ரத்தும் செய்யப்பட்டது.