லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று லாகூரில் நியூஸிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. தனது 5-வது சதத்தை விளாசிய ரச்சின் ரவீந்திரா 101 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 94 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சனுக்கு இது 15-வது சதமாக அமைந்தது.
2-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஜோடி 154 பந்துகளில், 164 ரன்கள் சேர்த்திருந்தது. முன்னதாக தொடக்க வீரரான வில் யங் 21 ரன்னில் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்திருந்தார். இறுதிக் கட்டத்தில் டேரில் மிட்செல் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் கிளென் பிலிப்ஸ் 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் விளாசினர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் லுங்கி நிகிடி 3, காகிசோ ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.