சீயோல்: தென் கொரியாவில் இன்று (டிச.29) காலை ஏற்பட்ட விமான விபத்தில் 179 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக தென் கொரிய தீயணைப்பு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் கொரிய தலைநகர் சீயோலுக்கு தெற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் முவான் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஜேசு ஏர் பேசஞ்சர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.03 மணிக்கு, 181 பேருடன் தரையிறங்கியது. அப்போது, விமானம் எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் இருந்து விலகி சுற்றுச்சுவரில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் 179 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரு பயணி, ஒரு விமான சிப்பந்தி என இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தெரிகிறது. 120 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களின் உடல்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தீயணைப்புப் பணியில் 32 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.