நெல்லை: தென் மாவட்டங்களில் புதுமண தம்பதிகளுக்கு தல பொங்கல்படி சீர்வரிசை கொடுப்பதற்காக கலர்புல் பனை நார், ஓலை பெட்டிகள் விற்பனைக்காக வந்துள்ளன. அரிசி பெட்டிகள் ரூ.400 முதல் 600 வரையும், நார்பெட்டி சிறியது ரூ.150 முதல் ரூ.200க்கும், கன்னிக்கு பூஜை பெட்டி ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனை தொழில் சிறப்புற்று விளங்கி வருகிறது. கற்பக விருட்சமான பனை மரங்களின் அனைத்து பொருட்களும் மகத்தான மருத்துவ குணமுடையது. பல்வேறு வகைகளில் மனிதர்களின் வாழ்க்கைக்கு பனை மரங்கள் இன்றியமையாததாக உள்ளது. பனை பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பனை மரத்தில் இருந்து சீசன் காலத்தில் பதநீர், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பதநீரை காய்ச்சி வடிகட்டி கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்கள் வேண்டி விரும்பி உண்கின்றனர். பனை ஓலைகளில் பாய், கூடை, பனைநார் மூலம் பெட்டிகள், சுளவு, கட்டில் முதலியவை தயார் செய்யப்படுகின்றன. இத்தகைய பனை பொருட்கள் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையின் போது கருப்பட்டி, பனங்கிழங்கு, ஓலை, நார்பெட்டிகள், சுளவு உள்ளிட்டவைகள் பயன்படுத்துவது இன்றியமையாததாகிறது. பொங்கல் பண்டிகை வரும் 14ம்தேதி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக வீடுகளை சுத்தப்படுத்தி வண்ணம் தீட்டி தயாராகி வருகின்றனர். புதுமண தம்பதிகளுக்கு தல பொங்கப்படி சீர்வரிசை கொடுப்பதற்காக பாத்திரங்கள், குத்துவிளக்கு, பலசரக்கு சாமான்கள், கரும்பு, வாழைப்பழம், அரிசி, காய்கறிகள், பனங்கிழங்கு, கருப்பட்டி உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
பொங்கலுக்கு இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில் புதுமண தம்பதிகளுக்கு தலபொங்கல்படி கொண்டு செல்ல வேண்டி பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக மார்க்கெட்கள், கடைகள், உழவர்சந்தை பகுதிகளில் கலர் பனை நார், ஓலை பெட்டிகள், சுளவு மற்றும் இறந்தவர்களுக்கான கன்னி பூஜைக்கு வைத்து கும்பிட்ட ஆடைகள் வைக்கும் மூடியுடன் கூடிய பெட்டிகள் நாங்குநேரி, பணகுடி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சீவலப்பேரி, தருவை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பனை தொழிலாளிகள் கொண்டு வந்துள்ளனர். இந்த அரிசி பெட்டிகள் ரூ.400 முதல் 600 வரையும், நார்பெட்டி சிறியது ரூ.150 முதல் ரூ.200க்கும், கன்னிக்கு வைத்து கும்பிடும் பெட்டி ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனை பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காக வாங்கி சென்றனர்.
The post தென் மாவட்டங்களில் புதுமண தம்பதிகளுக்கு தலபொங்கல்படிக்கான கலர்புல் பனை நார்பெட்டிகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.