ஊட்டி: ஊட்டி தெப்பக்காடு முகாமுக்கு சென்ற துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் யானைகளுக்கு உணவளித்தார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற பாகன் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக தோடர் பழங்குடியினருடன் பாரம்பரிய நடனம் ஆடினார்.
ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் ஆளுர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் நேற்று முன்தினம் ஊட்டி வந்திருந்தார். மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் மாலையில் ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்குடியின மக்கள் வாழும் முத்தநாடு மந்து பகுதிக்கு சென்றார். அங்கு அவர்களின், பாரம்பரிய கலாசாரத்தை கேட்டு அறிந்து கொண்டார். மேலும், அவர்களின் கோயிலை பார்வையிட்டார். தோடர் பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனம் ஆடினார். பின்னர் ராஜ்பவனில் தங்கிய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், நேற்று காலை 8 மணி அளவில் ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் மசினகுடி சென்றார். அவருடன் அதிகாரிகள் 2 ஹெலிகாப்டர்களில் சென்றனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு 9.30 மணியளவில் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு துணை ஜனாதிபதியை தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, முதன்மை வனப்பாதுகாவலர் ராஜேஷ்சவ்கரா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், வளர்ப்பு யானைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு யானைக்கு கரும்பு, பழங்கள் ஆகியவற்றை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வழங்கினார். வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளை பராமரிக்கும் பணிகள், அவற்றிற்கான உணவு முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து முதுமலையை சுற்றி பார்த்தார்.
பின்னர், ஆஸ்கர் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த பாகன்கள் பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து வாழ்த்தினர். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதனையடுத்து துணை ஜனாதிபதி முகாமிலேயே தங்கி இருக்க அவரது குடும்பத்தினர் முதுமலை வனப்பகுதிக்குள் சுமார் 1 மணி நேரம் வனத்துறை வாகனத்தில் ரோந்து சென்றனர். இதனால், நேற்று காலை 6 மணி முதல் 12 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு வாகன சவாரி முதுமலையில் நிறுத்தப்பட்டது. ஊட்டி – மசினகுடி சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து காலை 11.30 மணியளவில் யானைகள் முகாமில் இருந்து புறப்பட்டு மசினகுடி ஹெலிகாப்டர் தளத்திற்கு 11.45 மணிக்கு வந்து சேர்ந்தனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு துணை ஜனாதிபதி ஊட்டி சென்றார். மசினகுடி பஜாரில் துணை ஜனாதிபதி வந்து செல்லும் சாலையில் இருந்த அனைத்து கடைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. இதனால், வியாபாரிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஊட்டியில் துணை ஜனாதிபதி குடும்பத்துடன் கொண்டாட்டம்
காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் சமீபத்தில் சுற்றுலா பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இதைதொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை ரத்து செய்தனர்.
நாடே சோகத்தில் உள்ள போது, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். தொடர்ந்து, நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள முத்தநாடு தோடர் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு சென்று அவர்களுடன் நடனமாடியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், நேற்றும் முதுமலைக்கு சென்று, அங்கு யானைகள் முகாமை குடும்பத்துடன் குதூகலமாக சுற்றி பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டாம் எனவும் ஆளுநர் மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வேந்தர் ஆளுநரா? அழைப்பிதழால் சர்ச்சை
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதாவிற்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இது குறித்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவி ஆளுநரிடம் இருந்து பறிக்கப்பட்டு முதலமைச்சர் கைக்கு சென்று விட்டது. இதையடுத்து ஊட்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முற்றிலுமாக புறக்கணித்தனர். இந்த நிலையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி அழைப்பிதழ் மற்றும் செய்திக்குறிப்பில் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் என குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
துணை ஜனாதிபதி இன்று கோவை வருகை
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு வருகிறார். அங்கு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் ‘விக்சித் பாரதத்திற்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில் முனைவோரை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உரையாற்றுகிறார். விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல உள்ளார்.
The post தெப்பக்காடு முகாமில் யானைகளுக்கு உணவளித்து ஆஸ்கர் தம்பதிக்கு துணை ஜனாதிபதி வாழ்த்து: பழங்குடியினருடன் பாரம்பரிய நடனம் appeared first on Dinakaran.