அண்ணாநகர்:சென்னை மாநகராட்சி அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட இடங்களில் சாலையில் நடந்து செல்வோர், பைக்குகளில் செல்வோரை தெரு நாய்கள் விரட்டி, விரட்டி கடித்து வந்தது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர். நாய்க்கடிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுசம்பந்தமாக பொதுமக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட செனாய்நகர் அருணாசலம் தெருவில் நேற்றிரவு சாலையில் நடந்துச்சென்ற பெரியவர், சிறுவர்கள் உள்ளிட்டோரை தெருநாய்கள் விரட்டி, விரட்டி கடித்தது. இதில், காயம் அடைந்த முதியவர், சிறுவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுடன் விரைந்துவந்து தெரு நாய்களை பிடித்து சென்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘’எங்கள் பகுதியில் தெருநாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். அண்ணாநகர் 8வது மண்டல அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெரு நாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவோ, தொந்தரவு செய்துவரும் தெரு நாய்களை பிடித்து செல்லவோ நடவடிக்கை மேற்கொள்ளாததால் நாய்கள் அதிகமாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்றிரவு செனாய் நகர் அருணாச்சலம் தெருவில் 8 பேரை தெரு நாய் கடித்து குதறிவிட்டது. காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இனிமேலாவது ஆபத்துவரும் முன்னே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.
The post தெருநாய்கள் விரட்டி, விரட்டி கடித்து சிறுவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்: செனாய் நகரில் பரபரப்பு appeared first on Dinakaran.