“நாய்களைப் பற்றி ஆய்வு செய்வதற்கு என்ன இருக்கிறது?” – 17 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் தெருநாய்கள் குறித்து ‘ரோ-இண்டிஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு நடத்தியபோது, மக்கள் இப்படித்தான் கேட்டனர். கடந்த சில ஆண்டுகளில் அந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டதாக இந்த ஆய்வை நடத்திய அரசியல்- சுற்றுச்சூழல் நிபுணர் கிருத்திகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். நன்றி உணர்வுக்கான உதாரணமான நாய், அண்மைக்காலமாகப் பெரும் தொந்தரவாகவும் ஆபத்தை விளைவிப்பதாகவும் மாறிவிட்டதை யாரும் மறுக்க முடியாது.
நாய்களை எதிர்கொள்வது எப்படி? – தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நிகழ்ந்த நாய்க்கடிச் சம்பவங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் எனத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை கூறுகிறது. 2024இல் 47 பேர் ‘வெறிநாய் நோய்’ (ரேபிஸ்) தொற்றால் இறந்துள்ளனர். இவர்களில் குழந்தைகளும் இளைஞர்களும்தான் அதிகம்.