சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் நகர விற்பனை குழுவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.நகரை சேர்ந்த மீனாட்சி, செல்லம்மாள் உள்ளிட்ட 8 பேர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் தெரு ஓரங்களில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிய விண்ணப்பங்களை பரிசீலிக்குமாறு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையில் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடிய இடங்கள், வியாபாரம் செய்ய முடியாத இடங்கள், நகர விற்பனை குழு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தருமாறு கடந்த மாதம் 17ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநராட்சி தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், டிபிஆர் பிரபு ஆகியோர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், சென்னையில் 561 சாலைகளும் 35,730 தெருக்களும் உள்ளன. இது மட்டுமல்லாமல் 70 பகுதிகள் மார்கெட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு பகுதி சாலையோர கடைகளுக்கான பகுதி என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 253 சாலைகள் வியாபாரம் செய்யும் பகுதியாகவும், 149 சாலைகள் வியாபாரம் செய்ய முடியாத பகுதிகளாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. 573 பகுதிகளை வியாபாரம் செய்யக்கூடிய பகுதிகளாகவும், 1884 பகுதிகளை வியாபாரம் செய்ய கூடாத பகுதிகளாகவும் மாற்றுவதற்கான பரிசீலனைக்கு நகர விற்பனை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
23,232 சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. 1896 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஒட்டுமொத்த சென்னை மாகராட்சிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தலைமையில் ஒரே ஒரு நகர விற்பனை குழுதான் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், இந்த குழுவால் அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து முடிவெடுக்க சில ஆண்டுகள் ஆகலாம். எனவே, சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக நகர விற்பனை குழுவை அமைக்க வேண்டும்.
இந்த 15 மண்டல நகர விற்பனை குழுவுக்கும் தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் மாநகராட்சி கமிஷனர்தான் தலைவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த சட்டத்தின் பிரிவு 20ன் கீழ் வியாபாரிகள் குறைதீர் குழுவை அமைக்கலாம். இந்த குழுவுக்கு சிவில் நீதிபதி அல்லது மாஜிஸ்திரேட் தலைவராக இருக்க வேண்டும். இந்த துணை குழுவால் வியாபாரிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும். எனவே, 15 மண்டலங்களிலும் நகர விற்பனை குழுவை அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு 2 மாதங்களுக்குள் கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதத்தின்மீது நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் 2 மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 28ம் தேதி சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post தெருவோர வியாபாரிகளின் விண்ணப்பங்கள் பரிசீலித்து முடிவெடுக்க 15 மண்டலங்களிலும் நகர விற்பனை குழுக்களை அமைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.