சென்னை: “தெரு நாய்க்கடி சிக்கலுக்கு அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது. புளுகிராஸ் உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை உள்ளடக்கிய செயல்திட்டத்தை உருவாக்கி, அதன் வாயிலாக தெருநாய்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதை தொடர் இயக்கமாக அரசு நடத்த வேண்டும்”, என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகம் எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது தெருநாய்க்கடியால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சிக்கல். தெருநாய்க்கடி சிக்கலுக்கு ஒன்றைக் காரணமோ அல்லது ஒற்றைத் தீர்வோ இல்லாத நிலையில், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து. சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து வெறிநாய்க்கடி சிக்கலுக்கு தீர்வு காண்பதை ஓர் இயக்கமாக மாற்ற வேண்டும்.