சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் ஆளுநர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று (ஜனவரி 6) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே வெளியேறி காரில் புறப்பட்டுச் சென்றார்.