புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மன்மோகன் சிங்குக்கு மத்திய அமைச்சரவை 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது.
மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தில், "இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அமைச்சரவை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் மேற்கு பஞ்சாபின் கா என்ற கிராமத்தில் செப்டம்பர் 26, 1932 அன்று பிறந்த மன்மோகன் சிங், அறிவார்ந்த முறையில் தொடர்ந்து கல்வி பயின்றார். 1954-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், 1957 ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டமும் பெற்றார். 1962-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு டி.ஃபில் பட்டம் வழங்கியது.