சென்னை: தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 44 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ₹2.52 கோடிக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: கடந்த 4 வருடத்தில் மட்டும், 153 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ₹19 கோடி அளவுக்கு அரசு உயரிய ஊக்கத் தொகையாக வழங்கி இருக்கின்றது. விளையாட்டுத்துறையை தேர்ந்தெடுக்கின்ற மாற்றுத்திறனாளிகளோட எதிர்காலத்தை மனதில் வைத்து, அரசு உங்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கி வருகின்றது.
இதன் மூலமாக சமீபத்தில் கூட 5 மாற்றுத்திறன் வீரர் – வீராங்கனையர், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள். மேலும், சட்டமன்றத்தில் உங்களுக்காக அறிவிக்கப்பட்ட 6 பாரா ஸ்போர்ட்ஸ் அரங்கங்களும் இந்த ஜுன் மாதத்திற்குள் திறந்து வைக்கப்பட்டு உங்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவர் ராமசந்திரன், சர்வதேச பாரா தடகள வீரர் மனோஜ் சிங்கராஜா, தேசிய பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பேபி சஹானா, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பாரா வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 44 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ₹2.52 கோடி ஊக்கத் தொகை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.