அசாமில் தேயிலை தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு நேற்று முன்தினம் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவாஹாட்டி சரசஜாய் மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவுக்கு வந்த பிரதமரை பழங்குடியினத்தை சேர்ந்த 9 ஆயிரம் பெண்கள் உற்சாக நடனமாடி வரவேற்றனர்.
விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “அசாமில் இன்று ஒளியால் நிரம்பிய மிகச்சிறந்த சூழலை காணமுடிகிறது. இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு நடனக் கலைஞரும் தயாரானதை (ஒத்திகை நிகழ்ச்சியை) எல்லோரும் பார்க்க முடிந்தது. இந்த ஏற்பாடுகளில் தேயிலை தோட்டங்களின் இனிமையான வாசனையை உணரமுடிகிறது. மக்களுக்கு நன்றாகத் தெரியும், தேநீரின் நறுமணத்தை தேநீர் விற்றவரை விட வேறு யார் நன்கு அறிவார்கள் என்று. இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் அசாமின் பெருமையை பறைசாற்றுவதுடன் இந்தியாவின் வளமான பன்முகத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.