*கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பயணம்
பட்டுக்கோட்டை : கோயம்புத்தூர் முதல் வேதாரண்யம் வரை கல்லூரி மாணவ, மாணவிகள் ஓட்டுக்கு பணம் வாங்காதீர் என வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஈரோட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ‘முனை இளைஞர் இயக்கத்தை‘ நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.
சமூகம் ஒரு நேர்மையான, ஒரு சிந்தனை மிக்க சமூகமாக மாற வேண்டும். பொதுமக்களிடத்தில் மனமாற்றத்தை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க யாரும் பணம் வாங்கக் கூடாது என்பதை முன்னிறுத்தி இதே போல் இயக்கங்களை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்க கை நீட்டாதீர். 400 கிலோ மீட்டர் காந்திய நடை பயணம் என்பதை முன்னிறுத்தி ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிபி, அனுஸ்ரீ, லைலாபானு, சௌமியாஸ்ரீ, அர்ச்சனா உள்ளிட்ட 6 கல்லூரி மாணவ, மாணவிகள் கோவை அருகே உள்ள போத்தனூர் காந்தி நினைவிடத்திலிருந்துகடந்த 11 ஆம் தேதி நடை பயணமாக புறப்பட்டனர்.
இவர்கள் வரும் ஜனவரி 28ஆம் தேதி வேதாரண்யம் ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் இந்த நடை பயணத்தை நிறைவு செய்கின்றனர். மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம் ஓட்டுக்கு பொதுமக்கள் யாரும் பணம் வாங்கக் கூடாது.
நேர்மையான, சிந்தனைமிக்க சமூகமாக மாற பொதுமக்கள் மனமாற்றத்தை நோக்கி இந்த நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நடை பயணமாக கல்லூரி மாணவர்கள் நேற்று பட்டுக்கோட்டைக்கு வந்தனர்.
இது குறித்து நடை பயணத்தில் கலந்து கொண்டுள்ள கல்லூரி மாணவர்கள் கூறுகையில்,இந்த பயணத்தில் மாணவிகள் 4 பேரும், மாணவர்கள் 2 பேரும் என 6 பேர் கலந்து கொண்டுள்ளோம். பெண்கள் என்றால் இதுபோன்ற நடை பயணம் செய்யும்போது பல பிரச்சனைகளை தாண்ட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இவ்வாறு நாங்கள் உடலையும் வறுத்திக்கொண்டு, பிரச்சனைகளையும் தாண்டி நடைபயணம் செய்கிறோம் என்றால் எங்களின் கொள்கை முக்கியம்.
எங்களுடைய கொள்கை என்பது பொதுமக்கள் யாரும் ஓட்டுக்கு காசு வாங்கக் கூடாது என்பது தான். உயிரே போனாலும் ஓட்டுக்கு நான் காசு வாங்க மாட்டேன் என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அவர் நல்ல குடிமகன் ஆவார்.
பொதுமக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த மனமாற்றத்தை கொண்டுவர இந்த நடை பயணத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நாள் ஒன்றுக்கு 25 கிலோ மீட்டர் முதல் 30 கிலோ மீட்டர் வரை நடந்து செல்கின்றோம். செல்லும் இடமெல்லாம் எங்களுடைய பயணச் செலவிற்கும், உணவுச் செலவிற்கும் பொதுமக்களே பணம் தந்து உதவுகிறார்கள்.
நேற்று கூட ஒரு கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய் என மொத்தம் 1,100 ரூபாய் வசூல் செய்து எங்களிடம் கொடுத்தார்கள். இதை நாங்கள் உண்மையான வெற்றியாக கருதுகிறோம். எனவே ஓட்டுக்காக பொதுமக்கள் யாரும் பணம் வாங்காதீங்க என்று கூறினர்.
The post தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காதீர் appeared first on Dinakaran.