புதுடெல்லி: சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் துணிச்சலான திருத்தம் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன ஒருமைப்பாட்டை அழிப்பதற்கான மோடி அரசின் மற்றொரு திட்டமிட்ட சதித்தாக்குதலே. முன்பு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கினார்கள். இப்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்தல் குறித்த தகவல்களைத் தருவதை இறுக்கமாக்குகிறார்கள்.
வாக்காளர்கள் நீக்கம், மின்னணு வாக்கு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குறித்து காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய போதெல்லாம், தேர்தல் ஆணையம் அலட்சியமான தொனியில் பதில் அளித்தது, தீவிரமான புகார்களைக்கூட ஏற்கவில்லை.