உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில், நியாயமான முறையில் தேர்தலை நடத்திவரும் தேர்தல் ஆணையத்தின்மீது மின்னணு வாக்கு எந்திரம் உட்பட ஏதாவது ஒரு வகையில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புதிதாக ஒரு குற்றச்சாட்டை தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர மாநில தேர்தலின் உண்மைத்தன்மை குறித்து அவர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். ‘அந்த மாநிலத்தின் மக்கள் தொகை 9.54 கோடி மட்டுமே. ஆனால், அதைவிட அதிகமாக வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடையில் 39 லட்சம் வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டனர்’ என்று அவர் எழுப்பியுள்ள கேள்வி சாதாரணமானதல்ல.