நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளால் பெரும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் முக்கிய கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது பாராட்டுக்குரியதாகும். பீகாரில் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 7.93 கோடிவாக்காளர்கள் உள்ளனர். பீகார் வரும் நவம்பரில் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை தீவிர சரிபார்த்தலுக்கு தேர்தல் ஆணையம் உட்படுத்தியது எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது.
இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு மொத்த வாக்காளர் பட்டியலும் தீவிர சரிபார்ப்பு செய்யப்பட்ட நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சரிபார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அதற்கான முழு சட்ட அங்கீகாரமும், அதிகாரமும், கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. தேர்தல் ஆணையம் எந்த சட்ட விதிமீறிலிலும் ஈடுபடவில்லை.