2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு சந்தித்த முக்கிய நிகழ்வு மக்களவைத் தேர்தல். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக தலைமையில் புதிய கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனைப் போட்டி நிலவியது. 2018இலிருந்து தொடரும் திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அதிமுக கூட்டணி 23.05% வாக்குகளையும், பாஜக கூட்டணி 18.28% வாக்குகளையும், நாம் தமிழர் 8.2% வாக்குகளையும் பெற்றன.
விடுதலைச் சிறுத்தைகளும் நாம் தமிழர் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உயர்ந்தன. பாஜக ஓரளவு வளர்ந்திருப்பதை அக்கட்சித் தலைமையிலான கூட்டணி வாங்கிய வாக்குவங்கி நிரூபித்தது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கி, முதல் மாநாட்டை விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் நடத்தினார்.