சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான மனுவில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுதாரர் மாணிக்கம் தாக்கூரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தேர்தல் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
The post தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க கோரி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.