திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இன்று காலை தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதற்காக மாணவி ஒருவர் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, அவரை அரசு பஸ் ஏற்றாமல் சென்றது. அப்போது அந்த பஸ்சின் பின்னால் மாணவி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து நேதாஜி நகர்-கொத்தக்கோட்டை, நிம்மியம்பட்டு வழியாக ஆலங்காயத்திற்கு தடம் எண் 1 ‘சி’ என்ற அரசு டவுன் பஸ் இயங்கி வருகிறது. இதில் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பலர் சென்று வருகின்றனர். இந்த டவுன் பஸ் வழக்கம்போல் இன்று காலை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் வழியில் பெரும்பாலான நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
அதேபோல் கொத்தகோட்டை பஸ் நிறுத்தத்திலும் பஸ் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு நிம்மியம்பட்டில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத செல்வதற்காக காத்திருந்த மாணவி ஒருவர், பஸ் நிற்காமல் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சை நிறுத்தும்படி கூறியபடியே மாணவி பஸ்சின் பின்னால் தொடர்ந்து ஓடினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டத்தை தொடர்ந்து பஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள், பயணிகள் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த மாணவியை பஸ்சில் ஏற்றி சென்றனர்.
வாணியம்பாடி-ஆலங்காயம் வழித்தடத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி மாணவி பஸ்சின் பின்னால் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டிரைவர் சஸ்பெண்ட்; கண்டக்டர் டிஸ்மிஸ்
இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து துறை பொது மேலாளர் உத்தரவின்பேரில் பஸ் டிரைவர் முனிராஜை சஸ்பெண்ட் செய்து ஆம்பூர் போக்குவரத்து பணிமனை மேலாளர் கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தற்காலிக கண்டக்டரான அசோக்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
The post தேர்வு எழுத பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்: திருப்பத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.