*விவசாய சங்கங்கள் எதிர்பார்ப்பு
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 100நாள் வேலைத்திட்டத்தை விவசாய பணிகளுக்கு செயல்படுத்த வேண்டுமென விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளான கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, மஞ்சளாறு அணை கிராமம், கோட்டார்பட்டி, செங்குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, அட்டணம்பட்டி, புல்லக்காபட்டி, சாத்தாகோவில்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, வைகைபுதூர், வரதராஜ்நகர், ஜெயமங்கலம், மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, வேல்நகர், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி உள்பட 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புகள் பிரதான தொழிலாக உள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர் சாகுபடி, புஞ்சை தோட்டப்பயிர் சாகுபடி, நன்செய் நெல் சாகுபடி என பருவத்திற்கு ஏற்ப பயிர் சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் மானாவாரி நிலங்களில் பருவமழை காலங்களில் நிலக்கடலை, எள், நாட்டுசோளம், இருங்குசோளம், மானாவாரிசோளம், கம்பு, தட்டைபயறு, பாசிப்பயறு, மொச்சைபயறு, துவரை, பருத்தி, தினை, கல்லுப்பயறு, கானம், உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
புஞ்சை தோட்டங்களில், தக்காளி, வெண்டை, கத்தரி, பூசணி, பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், புகையிலை, சின்னவெங்காயம், பல்லாரிவெங்காயம், வாழை, தென்னை, பூ வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நன்செய் வயல்களில் நெல், மற்றும் கரும்பு, வாழை, பருத்தி, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது இந்த வகையான விவசாய பணிகளுக்கு கடும் கூலியாட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த விவசாய கூலியாட்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிறுசிறு பயிர் சாகுபடியினை தவிர்த்து, தென்னை, கரும்பு, வாழை ஆகிய பயிர்களை சாகுபடி செய்ய தொடங்குகின்றனர்.
காய்கறி பயிர்கள் மற்றும் பயறு வகைகள், பூ வகைகள் ஆகியவற்றிற்கு வேலைகளுக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறது. ஒரு சில இடங்களில் விவசாய கூலியாட்கள் வேலைகளுக்கு கிடைக்கின்றனர்.
ஒரு சில இடங்களில் விவசாய கூலியாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவசாய கூலியாட்கள் தட்டுப்பாட்டால் சிறுசிறு பயிர் சாகுபடிகள், நுணுக்கமான பயிர் சாகுபடிகள் பெருமளவில் குறைந்து வருகிறது. இதனால் 100நாள் வேலைத்திட்ட பணியாளர்களை தோட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினால் பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும், அதே சமயத்தில் விவசாயகளுக்கு அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து சில்வார்பட்டி விவசாயிகள் நலச்சங்க பொறுப்பாளர் முத்துக்காமாட்சி கூறுகையில், ‘‘தேவதானப்பட்டி பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற்று வருகின்றது. தற்போது விவசாயப்பணிகளுக்கு கூலியாட்கள் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
விவசாயிகள் விவசாயப்பணிகளுக்கு அனைத்தும் விலை ஏற்றம், விதை விலை, உழவிற்கு பயன்படும் டிராக்டர் டீசல் விலை உயர்வு, கூலியாட்கள் சம்பள உயர்வு, ரசாயன விலை ஏற்றம், பூச்சிகொள்ளி மருந்து விலை உயர்வு, என அனைத்து வகையிலும் அதிக கொள்முதல் செய்து பயிர்களை சாகுபடி செய்யும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
ஆனால் அறுவடை சீசனில் வியாபாரிகள் வைத்ததுதான் விலை என்ற நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பொருளுக்கு கட்டுபடியான விலை இல்லாமல் போராடிவருகின்றனர். இந்நிலையில் தற்போது விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
100நாள் வேலைத்திட்டம் மூலம் கண்மாய் கரை பலப்படுத்துதல், நீர்வழித்தட வாய்க்கால்கள் தூர்வாருதல், ஓடைகள் தூர்வாருதல், விளைநிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல், சிறு தடுப்பணைகள் கட்டுதல், விளைநிலங்களில் வரப்பு கட்டுதல், சிறு கண்மாய்கள் தூர்வாருதல், உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இதில் விவசாயிகளுக்கு சில நல்ல திட்டங்களும் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அன்றாடம் நடைபெறும் விவசாய வேலைகளுக்கு 100நாள் வேலைத்திட்ட பணியாளர்களை அந்தந்த ஊராட்சிகள் மூலம் விவசாயிகளின் விளைநிலங்களுக்கு விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
இதில் 100நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வேலை செய்யும் விவசாயிகளிடம் கூலியாக ஒரு பங்குத்தொகை வாங்கி, ஊராட்சி நிர்வாகம் மூலம் மீதி சம்பளத்தை வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாய வேலைகளுக்கு கூலியாட்கள் தட்டுப்பாடு நீங்கும்.
விவசாய பயிர் சாகுபடி பரப்பளவு அதிகரித்து மகசூல் அதிகளவில் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியும். மேலும் தற்போது விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் இடுபொருட்களில் விலை ஏற்றத்தை குறைந்த அளவு சம்பளத்தில் அதிக ஆட்கள் வேலைகளுக்கு கிடைக்கும்போது விவசாயிகள் சிரமமின்றி பயிர் சாகுபடியினை செய்வார்கள்.
இது தவிர தற்போது தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய மதிப்பளித்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை களத்திற்கு அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில் விவசாயப்பணிகளுக்கு கூலியாட்கள் தட்டுப்பாட்டை போக்கவும், செலவினங்களை குறைக்கும் வகையில் 100நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்து செயல்படுத்த விவசாய சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்’’என்றார்.
The post தேவதானப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டம் விவசாய பணிகளுக்கு செயல்படுத்தப்படுமா? appeared first on Dinakaran.