*ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் நடந்த ஈஸ்டர் பெரு விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து 40 நாள் தவக்காலம், முதல் வாரத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்வும் இதனைத் தொடர்ந்து பெரிய வியாழன் அன்று கால் கழுவும் சடங்கும், மேலும் புனித வெள்ளி சிறப்பு திருச்சிலுவைப் பாதை நடந்தேறியது.
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் நள்ளிரவு நடந்த ஈஸ்டர் பெருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு உயிர்த்த இயேசுவை தண்டனிட்டு சென்றனர்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் நள்ளிரவு நடந்த ஈஸ்டர் பெருவிழா திருப்பலி பூஜையை ஆலய பங்குத்தந்தை லியோ மரிய ஜோசப் தலைமையில், சிறப்பு விருந்தினராக திருச்சி தமிழக ஆயர் பேரவை சமூக சேவை பணியகம் தமிழக செயலாளர் அருட்தந்தை ஜேசுதாஸ் கலந்து கொண்டு சிறப்பு ஈஸ்டர் பெருவிழா பாடல் திருப்பலி பூஜையை நடத்தினார்.
தொடர்ந்து, நேற்று சிறப்பு திருப்பலி பூஜையை நிகழ்த்தினார். விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடைகளை அணிந்து கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பெருவிழா நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மிக பிரமாண்டமான மலையில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் நிகழ்வு மிக சிறப்பாகவும் மற்றும் தத்ரூபமாகவும் இருந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.
விழா முன்னிட்டு ஆலயம் மற்றும் உட்புறம் மற்றும் வெளிப்புரத்தில் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பாடகர் குழு தலைவர் லியோ தலைமையில் சிறப்பு பாடல்களை பாடல் குழுவினர் பாடினார்கள்.
விழா முடிவில் வேதியர் டேவிட் நன்றி கூறினார். இதேபோல் ராணிப்பேட்டை சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலயம், சிப்காட் புனித தோமையார் ஆலயம், பெல் மற்றும் ஆற்காடு புனித அந்தோனியார் ஆலயங்கள், வாலாஜா சிஎஸ்ஐ ஆலயம், பாரதி நகர் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
The post தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா appeared first on Dinakaran.