பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் மாணவர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தேவாலாவில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியின் புதிய பள்ளி வளாகத்தில் ஊர் கூடி திருவிழா நடந்தது.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து கல்வி சீர் நிகழ்ச்சி, முன்னாள் மாணவர்கள் சங்கமம், பள்ளி ஆண்டு விழா மற்றும் கலைத்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
பழைய பள்ளி வளாகத்தில் இருந்து முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் பீரோ, பள்ளிக்கு தேவையான தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு சீர்வரிசை தட்டுகளை சுமந்து மேள தாளம் முழங்க ஊர்வலம், தேவாலா பஜார் வழியாக புதிய பள்ளி வளாகத்தை அடைந்தது.
முன்னதாக, பள்ளி வளாகத்தில் தேசியக்கொடியை பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனம்மாள் ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவ நேசமலர் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முன்னாள் மாணவரும் நெல்லியாளம் நகர மன்ற உறுப்பினருமான ஆலன் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சமுத்திர பாண்டியன் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவரும் கூடலூர் எம்எல்ஏவுமான பொன் ஜெயசீலன் மற்றும் முன்னாள் மாணவரும் கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியருமான பன்னீர் செல்வம், முன்னாள் மாணவரும் நகர்மன்ற உறுப்பினரும், நெல்லியாளம் நகர திமுக செயலாளருமான சேகரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
இதையடுத்து, எம்எல்ஏ பொன் ஜெயசீலன் பேசுகையில், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளியில் படித்து பலர் உயர்ந்த நிலையில் உள்ளனர். ஏழை தோட்டத்தொழிலாளியின் மகனாக பிறந்த நான் சட்டம் பயின்று இன்று எம்எல்ஏவாக உயர்ந்துள்ளேன். கல்விதான் உயர்வு தரும் மாணவர்கள் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்து நன்றாக படிக்க வேண்டும். மேலும் இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவருக்கு ஊக்கப்பரிசாக ரூ.5,000 எனது சார்பில் வழங்கப்படும் என்றார்.
கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம் பேசுகையில், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளியில் எனது ஆரம்பக்கல்வியை படித்து உயர்கல்வி கூடலூர் அரசு பள்ளியிலும் கல்லூரி படிப்பை கோவை அரசு கல்லூரியில் படித்து இன்று அதே கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வருகிறேன்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களே இன்று உயர் பதவிகளில் இருந்து வருகின்றனர் மாணவர்கள் கல்வி ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும் அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எனது சார்பில் ரூ.10,000 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் அசத்தல் நடனம் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பின் வாழ்த்துரை நிகழ்ச்சியும் சாதித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி மற்றும் முன்னாள் மாணவி டாக்டர் யாழினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் பொன்னரசு, முன்னாள் மாணவரும் அதிமுக தலைமை கழக பேச்சாளர் ரவி, சமூக ஆர்வலர் காளிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள் சூரியகலா, செல்வராணி, விஜயா வசந்த குமாரி, புவனேஸ்வரி, ஷீலா, முன்னாள் தலைமை ஆசிரியர் கண்ணதாசன், விழா குழு தலைவர் தியாகராஜ், கீதா, கேத்தீஷ்வரன், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி விழாவில் முன்னாள் மாணவர்கள் நடனம் appeared first on Dinakaran.