மும்பை: மகாராஷ்டிர புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். அவரது தந்தை கங்காதர் ராவ் ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர் ஆவார். தற்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பட்னாவிஸின் தந்தை கங்காதர் ராவின் ஆதரவுடன் பாஜகவில் வளர்ந்தவர். அவரது மறைவுக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் அரசியலில் கால் பதித்தார். ஆரம்ப காலத்தில் அவர் நிதின் கட்கரியின் ஆதரவாளராகவே இருந்தார்.
மகாராஷ்டிர பாஜகவில் நிதின் கட்கரிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே காய்களை நகர்த்தி வந்தார். இந்த சூழலில் கட்கரி அணியில் இருந்து முண்டே அணிக்கு தேவேந்திர பட்னாவிஸ் மாறினார். மகாராஷ்டிர அரசியலில் மராத்தா சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதை மாற்ற பாஜக தலைமை திட்டமிட்டது. கோபிநாத் முண்டேவின் மறைவுக்குப் பிறகு தேவேந்திர பட்னாவிஸை பாஜக தலைமை முன்னிறுத்தியது.