சென்னை: அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பழனியில் 2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூசம் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலை அமைந்துள்ளது இந்த பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் மூலவர் சிலை போகர் என்ற சித்தரால் நவபாஷானத்தால் செய்யப்பட்டுள்ளது. பழனி மலை கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் 450 அடி உயரத்தில் அமைந்துள்ள நிலையில் 690 படிகள் கடந்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
இந்த கோவிலில் பங்குனி உத்திரம் தைப்பூசம் சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தைப்பூச திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர் மேலும் இங்கு தினமும் தங்க தேர் வழிபாடு நடக்கிறது.
பழனி முருகன் கோவில் தற்போது ஆன்மீக தலமாக மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.தைப்பூச திருவிழாவிற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை சந்திப்பில் இருந்து பிப். 11,12 ஆகிய தேதிகளில் பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கபடும். மதுரை சந்திப்பில் பிப். 11, 12-ம் தேதி காலை 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 11.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து பிப். 11, 12 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு ரயில் புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.
The post தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கம் appeared first on Dinakaran.