சென்னை: “தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? ஒன்றுபட்டு போராடுவோம். அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தொகுதிகள் சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் 8 தொகுதிகளை வெட்டிக் குறைக்கும் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ஏற்று தமிழ்நாடு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதனையொட்டி பல துறைகளிலும் முன்னேறி முதன்மை இடத்தை வகித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொண்டும் அரசியல் தளத்தில் வெற்றி பெற முடியவில்லை.