தொகுதி மறுசீரமைப்பு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் என யாரும் எதுவும் சொல்லாதபோது, அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவது மோசடியானது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இல்லாத பிரச்சினையை, கற்பனையாக மக்களிடையே புகுத்தி, மாநிலத்தை எப்போதும் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார். நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர், தேர்தல் ஆணையர் என யாரும் சொல்லாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குரித்து முதல்வர் பேசுவது மோசடியான செயல். எதற்கெடுத்தாலும் சர்வகட்சிக் கூட்டம், சமபந்தி போஜனம் என முதல்வர் ஸ்டாலின் நடத்துவது ஏன்? மக்களை திசை திருப்பும் செயலை கண்டிக்கிறேன்.