சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: கச்சத் தீவை வைத்து கச்சைக் கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப் பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். 1974 தவறுக்கு அப்போது ஒன்றியத்தில் கூட்டணியில் இருந்த இன்றைய மாநில ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு’ எனத் துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர்.
கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதற்கான ஆதாரத்தைக் கொடுத்ததே அப்போதைய திமுக தலைவரும், முதல்வருமான தலைவர் கலைஞர் தான். அதோடு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து அவையை விட்டு வெளியேறியது திமுக. அதுமட்டுமல்லாது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி அப்போதைய திமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
கச்சத்தீவு பற்றிக் கடந்த 10 ஆண்டுகளாகப் பேசாத மோடி, திடீர் புரட்சியாளராக மாறி தேர்தல் பிரசாரத்தில் பேசினார். ஆனாலும் 40 தொகுதிகளிலும் பாஜ கூட்டணி தோற்றுப் போனது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியா முழுமையும் வஞ்சிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய விவகாரம் இந்திய முழுமைக்கும் பேசு பொருளாகியிருக்கிறது.
எங்கே இந்திய முழுமைக்கும் அது எதிரொலித்துவிடப் போகிறது என்ற அச்சத்தில் அதனைத் திசை திருப்ப ஒன்றிய அரசின் அஜெண்டாவை நிறைவேற்றக் கச்சத் தீவைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர் ரவி. கச்சத் தீவு பற்றிய கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே.. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மீனவர்களை விடுதலை செய்ய மோடியிடம் கோரிக்கை வையுங்கள். அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் அவரோடு போட்டியிட வேண்டாம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
* ‘சீமானை சமாளிப்பது தூசு மாதிரி’
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: சீமான் வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு. இதில் புகார்தாரராக உள்ள பெண்மணி, சீமான் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். சீமான் தன் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கில் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்.
பெண்களுக்கு எதிரான கொடுமை இது என்று கூறியது. நீதிமன்றம் தந்த அழுத்தத்தில்தான் இந்த வழக்கு நடைபெறுகிறது. இதில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்குபதிவு செய்து இந்த வழக்கு நடந்து வருகிறது. சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்னையே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தொகுதி மறுசீரமைப்பு சதி அம்பலம் தடுக்க கச்சத்தீவு பிரச்னையை மீண்டும் கிளப்புகிறார்கள்: ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.