நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மாநில உரிமையை காப்பது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் நா.முருகானந்தம் கலந்து கொண்டனர். அரசியல் கட்சிகளின் சார்பில் அதிமுக அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளன, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், இந்திய ஜனநாயக கட்சி செய்தி ஊடகப்பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உட்பட 59 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாஜக, தமாகா, நாம் தமிழர் உள்ளிட்ட 7 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.