சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அழைப்புவிடுத்து 40 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் வரும் மார்ச் 24-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி வேளாண் பட்ஜெட் மற்றும் துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெற உள்ளது. இதற்கு சட்டப்பேரவை செயலகம் தயாராகி வரும் நிலையில், நேற்று பட்ஜெட் ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. காலை 11.45 மணிக்கு தொடங்கிய அமைச்சரவைக் கூட்டம் 12.30 மணிக்கு முடிவுற்றது.