சென்னை: “நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம்.” என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) பேசியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் தான் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.