சென்னை:தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். விழாவில் பங்கேற்ற மகளிர் அணியினர் பிரேமலதாவுக்கு ஆளுயுர மாலை அணிவித்தனர். பிரேமலதா கேக் வெட்டி மகளிர் அணிக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினருக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி: மகளிர் தினமான இன்று கேப்டனின் லட்சியம், கொள்கைகளை அனைவரும் வென்றெடுப்பதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மும்மொழி கொள்கை தொடர்பாக எங்களது கருத்துகளை ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்கிற கேப்டன் வாக்கின்படி தேமுதிக செயல்படும். தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு தமிழகத்தில் தொகுதிகளை குறைக்க கூடாது. இதற்காக தேமுதிக தமிழக அரசுடன் இணைந்து எதிர்ப்பை தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
* ராஜ்யசபா சீட் உண்டா? பிரேமலதா பெரிய கும்பிடு
அதிமுக அணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என பிரேமலதா கூறிவந்தார். ஆனால் சமீபத்தில் பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘அப்படி எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை’ என அதிரடியாக கூறிவிட்டார். இந்த நிலையில் பிரேமலதா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவரிடம் ராஜ்யசபா சீட் பற்றி நிருபர்கள் கேட்டனர். ஆனால் பிரேமலதா அதற்கு பதிலளிக்காமல், எழுந்து நின்று பெரிதாக கும்பிடு ஒன்றை போட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
The post தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தேமுதிக எதிர்ப்பு தெரிவிக்கும் appeared first on Dinakaran.