உலகின் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடான இந்தியா, தீவிரமான கழிவு மேலாண்மை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 62 மில்லியன் டன் கழிவு உற்பத்தி ஆகிறது. இதில் 75-80% சேகரிக்கப்பட்டாலும், மீதமுள்ளவை திறந்தவெளியில் அல்லது நிலப்பரப்புகளில் வீசப்படுகின்றன. 30%க்கும் குறைவான கழிவு மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது அல்லது மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த அணுகுமுறை சுற்றுச்சூழல் – சுகாதாரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
குப்பை இல்லா நகரங்கள்: 2021இல் தொடங்கப்பட்ட, ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டுக்குள் அனைத்து நகரங்களையும் குப்பை இல்லாத நகரங்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் பழைய குப்பைகளை அகற்றுவது, அறிவியல் ரீதியான கழிவு மேலாண்மை, கழிவைக் குறைப்பது, தூய்மையை மேம்படுத்துதல் போன்றவை இடம்பெற்றிருந்தன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ‘lakshya zero dumpsite’ என அழைக்கப்படுகிறது – அதாவது, ஏறக்குறைய 6,000 ஹெக்டேர் நகரப் பகுதி நிலத்தில் உள்ள பழைய குப்பைகளை அகற்றியாக வேண்டும்.