பெரம்பூர்: சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திரப் பதிவேடு ரவுடிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பவுடர் மில்ஸ் சாலை அருகே நேற்று முன்தினம் புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து 2 கத்திகள், 500 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்கின்ற பாம்பு நாராயணன் (24) என்பதும் இவர் மீது 10 குற்ற வழக்குகள் இருப்பதும், மற்றொரு நபர் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் (21) என்பதும், இவர்கள் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு ரவுடியிசத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, நாராயணன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று, ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீனா (18) என்ற நபரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (24) என்ற சரித்திர பதிவேடு ரவுடி நேற்று முன்தினம் ஓட்டேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட ஓட்டேரி பழைய வாழை மாநகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கின்ற சப்பி சூர்யா (19) என்ற சரித்திரப் பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல, எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சரித்திரப் பதிவேடு ரவுடி மணலி சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ் என்கிற தொண்டை ராஜ் (40) என்பவர் எம்.கே.பி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே ஆடு வாங்க வரும் வியாபாரிகளை குறிவைத்து சிலர் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் கடந்த 9ம் தேதி வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சரத் என்கின்ற கார்டன் சரத் (28) என்ற சரித்திர பதிவேடு ரவுடி புளியந்தோப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, இரண்டு சரித்திர பதிவேடு ரவுடிகளை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த சாந்தாபாய் என்கின்ற சாந்தகுமார் (25) மற்றும் புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்த சரவணன் (20) ஆகிய இரண்டு பேரை புளியந்தோப்பு போலீசார் ஆடுதொட்டி அருகே மடக்கிப் பிடித்தனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பித்து ஓடும்போது சாந்தகுமார் தடுக்கி கீழே விழுந்ததில் அவரது வலது கை உடைந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டுப்போட்டனர். பிறகு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது appeared first on Dinakaran.