துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பும் இருந்தது. லீக் சுற்றில் இருந்து இறுதிப் போட்டி வரை வெவ்வேறு கட்டத்தில் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்திய அணி வீரர்கள் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்தினர்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்ரேயஸ் ஐயர் முக்கியமான தருணங்கள் அனைத்திலும் அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைக்க உதவியிருந்தார். அதேவேளையில் கே.எல்.ராகுல் இறுதி கட்டத்தில் பதற்றம் இல்லாமல் நிதானமாக விளையாடி விதம் அற்புதமாக இருந்தது. கடந்தகால தொடர்களில் முக்கியமான தருணங்களில் அழுத்தத்தை சரியாக கையாளாமல் இந்திய அணி வெற்றிகளை வசப்படுத்தத் தவறியுள்ளது. ஆனால் இம்முறை தொடர் முழுவதுமே இந்திய அணி அழுத்தத்தை உட்கிரகித்து பதற்றம் இன்றி விளையாடி விதம் பாராட்டும் வகையில் இருந்தது.