கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. 175 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி பில் சால்ட் (56), விராட் கோலி (59), ரஜத் பட்டிதார் (34) ஆகியோரது அதிரடி பேட்டிங்கால் 22 பந்துகளை மீதும் வைத்து வெற்றி கண்டது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி கேப்டன் அஜிங்க்ய ரஹானே, சுனில் நரேன் ஆகியோரது அதிரடியால் 10 ஓவர்களில் 107 ரன்களை குவித்து மிரட்டியிருந்தது. இந்த ஜோடி ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வீதம் விளாசி பெங்களூரு பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் ஆட்டத்தின் நடுப்பகுதியில் சுனில் நரேன், ரஷிக் இஸ்லாம் பந்துவீச்சிலும், ரஹானே கிருணல் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர்.