ராமநாதபுரம்: மத்திய ரிசர்வ் வங்கி அழுத்ததால், தவணை கால அவகாசம் இருந்தும், தங்க நகைகளுக்கு வட்டிக்கட்டச் சொல்லி வங்கிகள் நிர்பந்தம் செய்வதால் விவசாயிகள், ஏழை,எளியமக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழில், பனைமரம்,தென்னைமரத் தொழில், உப்பளம், சேம்பர், சீமை கருவேல மரம் விறகு வெட்டுதல், கரிமூட்டம் போடுதல், கூலி தொழில் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மண் சார்ந்த தொழில், பாரம்பரிய தொழில்கள், அமைப்புச்சாரா மற்றும் உற்பத்தி, வியாபாரம் சார்ந்த தொழில்கள் நடந்து வருகிறது. இதுபோக அன்றாட கூலி பெறும் தொழிலாளி முதல் மாதச்சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் உள்ளனர்.
இளைஞர்கள், பட்டதாரிகள் முதலான சில தரப்பினர் கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை போன்ற தமிழகத்தில் உள்ள தொழில்சார்ந்த நகரங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். கிராம பகுதிகளில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் என வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு ஏழை, எளிய, நடுத்தர மக்களே அதிகமாக உள்ளனர்.
இவர்கள் சிறுக,சிறுக சேமித்த பணத்தில் தங்கநகைள் எடுத்து வருகின்றனர். அணிகலன்களை ஆடம்பரத்திற்காக எடுப்பது கிடையாது. முக்கியமாக பெண் பிள்ளைகள் திருமணம் மற்றும் மருத்துவம், பிள்ளைகளின் படிப்பு செலவு, சொந்தமாக தொழில் தொடங்குதல், சொந்த வீடு கட்டுதல் உள்ளிட்ட அவசர பணத்தேவையின் போது வங்கிகளில் தங்கநகைளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தவணை காலம் முடியும் தருவாயில் வட்டி, அசலை கட்டி மீட்டும், அசல் கட்ட முடியாதவர்கள் வட்டியை மட்டும் கட்டி மீண்டும் அடமானம் வைத்து வருவது வழக்கம்.
இதற்காக வீட்டில் இருக்கின்ற சிறிய மூக்குத்தி முதல் சங்கிலி வரையிலான இருக்கின்ற தங்க நகைகளை அந்தந்த பகுதியிலுள்ள வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் அடமானம் வைத்து வருகின்றனர்.
தங்க நகை கடன் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டவேண்டும். அதுபோல் 5 மாதங்கள் வரை உரிய வட்டி கட்டவில்லை என்றால், தேசிய வங்கிகள் அந்த நகைகளை ஏலத்திற்கு கொண்டுவரலாம். கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் 12 மாதங்கள் வரை காத்திருக்கும். கூடுதலாக 3 மாதம் கிரேஸ் அவகாசம் கொடுக்கும். இதற்கு கடன்தாரர்களின் செல் நம்பருக்கு குறுஞ்செய்திகள், வீட்டிற்கு தவணை தவறியதை நினைவூட்ட கடிதங்கள் அனுப்பப்படும்.
இதற்கு பின்பே அதிகபட்சம் 15 மாதங்களுக்கு பிறகே ஏலத்திற்கு செல்லும். ஆனால் மத்திய ரிசர்வ் பேங்க், வாடிக்கையாளர்களின் என்.பி.ஏ எனப்படும் செயல்படாத சொத்துக்கள்(தங்கநகை) அதாவது ஒரு வங்கிக்கு வருமானம் ஈட்டுவதை நிறுத்திய கடன்கள் அல்லது முன்பணம், கடன் வாங்கியவர் வட்டி அல்லது அசலை திருப்பி செலுத்தாத போது சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது நிதி ஆண்டு முடியும் மார்ச் மாதம் என்பதாலும், அடுத்த மாதம் ஏப்ரல் நிதி ஆண்டு துவங்குவதாலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதன் அழுத்தம் தாங்காமல் தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் குறிப்பாக விவசாயிகள், ஏழை, எளியமக்கள், சிறு,குறு தொழிலாளிகள், வியாபாரிகளிடம் வட்டிக்கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி,கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய 9 தாலுகாக்களில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 32 வங்கிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 132 வங்கிகளும் உள்ளது. இதில் பெரும்பாலும் விவசாயிகள், ஏழை,எளிய மக்கள், வியாபாரிகள் விவசாயக்கடன் மற்றும் தங்கநகைகடன் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு தவணை காலம் 5 முதல் 8 மாதங்கள் வரை இருக்கின்ற நிலையில் அடுத்த மாதம் நிதி ஆண்டு ஏப்ரல் மாதம் என்பதால் இந்த மார்ச் மாதத்திற்குள் வட்டி அல்லது அசலை கட்டச்சொல்லி வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு போன் வாயிலாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் வட்டி கட்ட சொல்வதால் பணம் தயார் பண்ண முடியாமல் மனஉலைச்சல் ஏற்படுவதாக விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கூறுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் பாக்கியநாதன் கூறும்போது.
விவசாயம், திருமணம், மருத்துவம், மேல்படிப்பு, தொழில் தொடங்குதல், வீடுகட்டுதல் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு வீட்டில் இருக்கின்ற தங்க நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறுகிறோம். நிதி ஆண்டு ஏப்ரல் மாதம் வருவதாலும், என்.பி.ஏவிற்கு வந்த நகைகளுக்கு, உரிய தவணை காலஅவகாசம் உள்ள நிலையில் வட்டிக்கட்டச் சொல்லி வங்கிகள் நிர்பந்தம் செய்கிறது.
சிரமத்திற்கிடையே நகைக்கு வட்டியை கட்டி,மீண்டும் அடமானம் வைத்துக்கொள்ள விரும்பினால், நகைக்கான வட்டி, அசலின் முழு தொகையையும் செலுத்தி மீண்டும் அடமானம் வைத்துக்கொள்ள நிர்பந்திக்கின்றனர். இதனால் ஏழை,எளியோர் விவசாயிகள் உடனடியாக பணத்தை தயார் செய்து கட்ட முடியாமல் கடுமையாக பாதிக்கின்றனர். இந்தாண்டு உரிய நேரத்தில் மழையின்றியும், காலம் கடந்து பெய்த கனமழையாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளிடம் பணப் புழக்கம் இல்லை. எனவே உரிய தவணைக்காலம் உள்ள வாடிக்கையாளர்களை வங்கிகள் வட்டி க்கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தி, தொந்தரவு செய்யக் கூடாது என கூட்டுறவு உள்ளிட்ட வங்கிகளுக்கு கலெக்டர் உத்திரவிட வேண்டும் என்றார்.
The post நகைக்கு வட்டி கட்ட வங்கிகள் அவகாசம் அளிக்குமா? விவசாயிகள் ஏழை மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.