சென்னை: வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகைக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் அவசரகால பண தேவைக்கு வங்கிகளில் நகைக் கடன் பெறுவது இன்றியமையாதது. ஏழை எளிய மக்கள் மற்றும் வேளாண் தொழில் செய்யும் உழவர்கள் தங்கள் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். தனியார் நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்தால், அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். இதனால் பலரும் வங்கிகளில் நகைக் கடன் பெறுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை வட்டி கட்டி திருப்பி கொள்ளலாம் என்ற விதிகள் உள்ளதால் பலரும் வங்கிகளில் நகைக் கடன் பெற விரும்புகின்றனர். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கியில் நகைக் கடன் வாங்குபவர்களில் பலர் தற்போது ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.